ஊரடங்கு காலத்தில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் ஓரளவு தட்டுத்தடுமாறி, தாங்கள் சேமித்துவைத்த பணத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இந்த ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கிராமப்புற மக்களே. விறகு வெட்டி, கட்டடத் தொழில் செய்து அன்றைய பொழுதை பெரும் சிரமத்தோடு கழித்து வந்தவர்களுக்கு பேரிடியாக வந்திறங்கியது கரோனா ஊரடங்கு.
இப்போது ஊரடங்கை ரத்து செய்துவிடுவார்கள் வேலைக்குச் சென்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்போடு இருப்பவர்களுக்கு ஏமாற்றத்தையே கரோனா அளித்துவருகிறது. இந்தியாவில் கிராமங்கள் குறைவதற்கும், அக்கிராமங்களை விட்டு மக்கள் வெளியேறுவதற்கு நோய்களைக் காட்டிலும், பஞ்சம் தான் காரணமாக இருக்கும். அவற்றைப் போக்குவதற்கு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கட்டாயம் எடுத்தே ஆக வேண்டும்.
ஆயிரம் ரூபாய் நிதியுதவி, நிவாரணப் பொருள்கள் ஆகியவற்றை அரசு வழங்கியுள்ள போதிலும் பிழைப்போட்ட தங்களுக்கு போதுமானதாக இல்லை என்று கூறுகின்றனர் தி. மீனாட்சிபுரம் கிராம மக்கள். அரசால் ஒருபோதும் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது என்று எண்ணிய கிராம மக்கள், கோயில் திருவிழா நிதியை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக கோயில் நிதியை நிவாரண நிதியாகப் பயன்படுத்தி மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாகி நிற்கிறது தி. மீனாட்சிபுரம் கிராமம். மதுரையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமாணிக்கம் ஊராட்சியில் உள்ளது இக்கிராமம். அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கிய கிராமமாக இருந்தாலும், சாதிய பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒற்றுமையோடு வாழ்ந்துவருகின்றனர்.
சாதி பார்ப்பவர்களுக்கு எங்கள் ஊரில் இடமில்லை என்ற எழுதப்படாத விதியுடன் இயங்கி கொண்டிருக்கும் கிராமத்தில் அய்யனார் கோயில், முத்தாலம்மன் கோயில், காளியம்மன் கோயில் என மூன்று கோயில்கள் உள்ளன. இம்மூன்று கோயில்களும் வெவ்வேறு சமுதாய மக்களுக்குப் பாத்தியப்பட்டாலும், அனைத்து மக்களும் ஒன்றுசேர்ந்து கோயில்களில் திருவிழாவைக் கொண்டாடி மீனாட்சிபுரத்தை மேம்பட்ட கிராமமாக மாற்றியுள்ளனர். கோயில் நிதியைப் பிரித்துக் கொடுத்தது குறித்து அங்குள்ள கிராமவாசிகள் சிலரிடம் பேசினோம்.
”ஊரில் உள்ள மூன்று கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்துவது எங்கள் மரபு. திருவிழாவைச் சிறப்பாக நடத்துவதற்காக மக்கள் அனைவரிடமும் நிதி வசூலித்து வைத்திருந்தோம். தற்போது வைரஸ் தொற்று காரணமாக அரசாங்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.