தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொடர்மழையால் வைகை அணை திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - மதுரை செய்திகள்

தொடர் மழையால், வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் 3,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், வைகை நதி பாயும் கரையோரப் பகுதி பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

வைகை அணை
வைகை அணை

By

Published : Nov 11, 2021, 4:07 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மாநிலத்தில் அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, தேனி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர் மழையால் முக்கிய நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மஞ்சளாறு, சோத்துப்பாறை மற்றும் சண்முகா நதி அணை ஆகியவைகளின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகின்றது.

66 அடியை எட்டியதும் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை

அதன் தொடர்ச்சியாக, ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி கடந்த நவ. 6ஆம் தேதி, 66 அடியை எட்டியது.

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோரப் பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையினால், அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது. நேற்று முன் தினம்(நவ.09) காலையில் 68.50 அடியும், இரவில் 69 அடியையும் எட்டியதால் அடுத்தடுத்து இரண்டு, இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

உபரிநீர் திறப்பு

நேற்று நவ. 9ஆம் தேதி, இரவு 10 மணிக்கு அணையின் பாதுகாப்புக் கருதி, 7 பெரிய மதகுகள் வழியாக உபரிநீர் 1,000 கன அடி ஆற்றின் வழியாக வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், மேகமலை வனப்பகுதி உள்ளிட்ட வைகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் மூல வைகை ஆற்றிலும், மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள கொட்டக்குடி, வராக நதி உள்ளிட்ட ஆறுகளில் இருந்தும் வரும் மழைநீராலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தே காணப்படுகிறது.

இதனால் தற்போது உபரிநீர் வெளியேற்றம் 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர வழக்கம் போல, பாசனம் மற்றும் குடிநீருக்காக விநாடிக்கு 569 கன அடி நீர், கால்வாய் வழியாக திறக்கப்படுகிறது.

நேற்று நவ.10 ஆம் தேதி வைகை அணையின் நீர்மட்டம் 69.26 அடியாகவும், நீர் இருப்பு 5,639 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது.

இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

நீர் வரத்து விநாடிக்கு 3,457 கன அடியாக உள்ளதால், அணையில் இருந்து மொத்தம் 3,569 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்ந்து அணையின் நீர்வரத்திற்கேற்ப நீர் வெளியேற்றம் அதிகரிக்கக் கூடும் என்பதால், வைகை கரையோரப் பகுதி பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை - அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் ..

ABOUT THE AUTHOR

...view details