வைகை அணையில் இருந்து விவசாயத்திற்காக, பூர்வீகப் பாசனப் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து முதலமைச்சரின் உத்தரவால் வைகை அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீரானது வரும் டிசம்பர் 2ஆம் தேதி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வைகையின் பூர்வீகப் பாசனப் பகுதி - மூன்றாம் பாகத்திற்கு நவம்பர் 16ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு 1441 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடவும், இரண்டாம் பாகத்திற்கு வரும் 17 முதல் 21ஆம் தேதி வரை 386 மில்லியன் கன அடி நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பகுதி ஒன்றைச் சேர்ந்த நான்கு கண்மாய்களுக்கு வரும் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையும், 48 மில்லியன் கன அடி நீரும், விரகனூர் மதகணையில் இருந்து வைகை பூர்வீகப் பாசனப் பகுதி ஒன்றாம் பாகத்திற்கு வரும் 26ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதிவரை நீர் திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.