அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம் அங்கு தமிழ் இருக்கை தொடங்க இருக்கிறது. அதற்குரிய ஏற்பாடுகளில் தீவிரமாக இயங்கிவரும் பல்கலைக்கழகத்தின் முதல்வர் டில்லீஸ் டீ ஆண்டோனியோ, தமிழ்நாட்டிற்கு 4 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்வையிட வந்த அவர், மதுரையில் திருமலை நாயக்கர் மஹால், உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள கீழடி அகழாய்வு பொருட்கள் கண்காட்சியகம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வு களம் ஆகிய இடங்களுக்கு நேரடியாகச் சென்றுப் பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ்ச் சமூகத்தின் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தின் மீது நடந்து செல்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன். அவர்களது கலாசாரமும் பண்பாடும் என்னை வியக்க வைக்கிறது. இந்த பயணம் தனிப்பட்ட முறையில் எனது அறிவை விரிவு செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இளைஞர்களின் வீரமும் விவேகமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இது போன்ற தமிழர்களின் கலாசார பெருமையை எனது பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தெரியப்படுத்துவேன். தமிழ் மொழியின் தொன்மை, தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் உலகிலுள்ள அனைவரும் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக எங்களது பல்கலைக்கழகத்தில் தனி இருக்கை தற்போது கொண்டு வருகிறோம்" என்றார்.
கீழடி அகழாய்வு பொருட்கள் அருங்காட்சியகம் குறித்து அவரிடம் கேட்டபோது, "இதுபோன்ற தொன்மை வாய்ந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கண்காட்சிகளை நான் முதன்முதலாக பார்வையிடுகிறேன். அங்கிருந்த பொருட்கள் எல்லாம் வியப்பை ஏற்படுத்தின. தொல்லியல் மற்றும் மனிதவியல் சார்ந்த அறிவுத்திறன் மேம்படுவதற்கு இதுபோன்ற அருங்காட்சியகம் அகழாய்வு களங்களும் நல்ல வாய்ப்பு என்றே கருதுகிறேன்" என்றார்.