மதுரை:பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் பேசினார்.
அவர் பேசுகையில், 'இலங்கைத் தமிழர்களுக்காக பாஜக தலைமையிலான மோடி அரசு மட்டுமே பாடுபடுகிறது. இதுவரை 60,000 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம். 8 ஆண்டுகளில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்தது மோடி அரசுதான். தற்போது இலங்கை சிறையில் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் கூட இல்லை என்பதை பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் 70 ஆயிரம் புதிய தொழில்முனைவோர்கள் உருவாகியுள்ளனர். இளைஞர்கள் ஏழைகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகிறோம். கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தையும் கண்காணித்துள்ளோம். இத்தனை சிக்கல்களுக்கு இடையிலும் பெட்ரோல், டீசல் விலையில் எட்டு ரூபாயை குறைத்து சாதனை படைத்துள்ளது, மோடி அரசு.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை:தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துள்ள திமுக, தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை. தமிழ்நாட்டில் பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கும் வரை, திமுக இனி ஊழல் செய்ய முடியாது. தங்களது குடும்பத்தினருக்காக திமுக சொத்துக்களை சேர்த்து வருகிறது.