மதுரைசிந்தாமணி புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜூலை30) ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், 'எப்படி இந்த மண்டபம் பெரிதாக உள்ளதோ.? அது போல் மதுரை நிர்வாகிகள் வீரமும் பெரிது, உள்ளமும் பெரிது. பணத்தை நம்பி இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி பின்னால் சென்றிருப்பார்கள்.
ஆனால், அப்படி செல்லவில்லை. தற்போது தலைமை பதவிக்கே ஏலம் போட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளார்கள். பணபலத்தை கொண்டு வாழ்நாள் முழுவதும் ஆட்சி ஆள நினைப்பவர்கள் மீது நாள்தோறும் வழக்குகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆளுகிற போது மக்கள் வரிப்பணத்தை முறையாக செலவு செய்யாமல் தாங்கள் சுருட்டிக்கொண்டதால், இன்று வழக்கை எதிர்நோக்கி உள்ளார்கள். அதிமுக தற்போது கம்பெனியாக செயல்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால்கூட அதிமுக பொதுச் செயலாளராக ஆகிவிடலாம். அந்த அளவிற்கு கட்சிப்பதவி ஏலம் விடப்படுகிறது. ஜெயலலிதா மறைவிற்குப்பின் இது அவருடைய கட்சியோ, ஆட்சியோ கிடையாது என்பதால் அவர்கள் செல்லும் போக்கு சரியில்லை என்பதாலேயே கண்டித்தேன்.
நான் மதுரையில் போட்டியிட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால், சசிகலா தான் என்னை ஆர்.கே.நகரில் நிற்க வைத்தார். அன்றே எடப்பாடி பழனிசாமிக்குப் பயம் வந்து விட்டது. கட்சியில் இருப்பவர்களிடம் யாரும் ஊழலில் ஈடுபடாதீர்கள் என்று சொல்லியும் யாரும் கேட்காததால் நான் விலகி விட்டேன்.