மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களாக முத்துபட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த விஜய் ஆகியோர் சிறந்த தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் அடுத்த அவனியாபுரத்தில் தை திருநாளை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி மிக கோலாகலமாக நடைபெற்றது. இந்த போட்டியில், 523 காளைகளும் 420 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடந்த போட்டி 8 சுற்றுகளாக நடத்தப்பட்டன.
ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை பிடித்த வீரர்கள் அடுத்த சுற்றுக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் எட்டு சுற்றுகளையும் சேர்த்து, மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு, ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த விஜய் என்ற இரண்டு மாடுபிடி வீரர்கள் தலா 26 காளைகளை பிடித்து முதலிடம் பெற்றனர்.
போட்டியின் சிறந்த காளையாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் நிறுவனர் ஜி.ஆர். கார்த்திக்கின் வேலு என்ற காளை தேர்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக வழங்கப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும், சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட இருவருக்கும் பரிசாக வழங்கப்பட்டன. சிறப்பாக விளையாடிய வேலு காளைக்கும் இருசக்கர வாகனம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.
இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 58 மாடுபிடி வீரர்களும், மூன்று காளைகளும் காயம் அடைந்தனர். காளை அவிழ்ப்பதில் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:'தமிழ் உணர்வை யாராலும் நசுக்க இயலாது' - காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி