டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்தாண்டு செப்டம்பர் 1ஆம் தேதியில் நடந்தது. இதில் தேர்ச்சிபெற்று, தரவரிசைப் பட்டியலில் முதல் நூறு இடம் பிடித்தோரில் 39 பேர், ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியோர் என்பதால் தேர்வில் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி நடத்திய விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு அரசு பணி தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
மேலும், முறைகேட்டுக்குத் துணை புரிந்த டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். முறைகேட்டுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சென்னை புதுப்பேட்டையில் வசிக்கும் காவலர் சித்தாண்டி, இடைத்தரகர் ஜெயக்குமார் ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.