நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக பிரபல நடன கலைஞரும், பத்மஸ்ரீ விருதுபெற்ற முதல் திருநங்கையுமான நர்த்தகி நட்ராஜ் சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில், “மாற்று பாலினத்தவராக ஒரு திருநங்கையாக எங்களை இந்த சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்வதற்கான வழி தெரியாமல் தடுமாற்றத்தோடுதான் நாங்கள் பயணிக்கிறோம். எங்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் உணர்ந்து இருக்கும் அதே நேரத்தில் எங்களுக்கு இதுதான் தேவை என்பதை தர வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்த சமூகத்திற்கு உண்டு.
திருநங்கைகள் என்பவர்கள் எங்க வானத்திலிருந்து பிளந்துகொண்டோ அல்லது பூமியை கிழித்துக்கொண்டோ வரவில்லை. இந்த சமூகத்தில் ஒருவராக ஓர் அங்கமாக தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவே அவர்கள் போராடுகிறார்கள். ஆகையால் அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்கின்ற எண்ணம் அனைவருக்கும் வரவேண்டும்.
தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டு மொத்த தமிழகத்தில் இருந்தும் ஒரே ஒரு திருநங்கை வேட்பாளர்தான் களத்தில் இறங்கியுள்ளார். இது வேதனையாக இருக்கிறது. இதற்கு காரணம் சமூகம்தான். அவர்களது பெருமளவிலான வருகையை இந்த சமூகம் அங்கீகரிக்கவில்லை. அதனால்தான் அவர்களுக்கு இருக்கின்ற தயக்கத்தின் காரணமாக போட்டியிட முன்வர மறுக்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் வேறு யாரைக்காட்டிலும் திருநங்கைகள் செய்கின்ற தியாகம் என்பது அளவிடற்கரியது. அவர்களுக்கு முறையான சமூக மரியாதை கிடைக்கும் பட்சத்தில் மிக நேர்மையான வேட்பாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் கிடைக்க அதிக வாய்ப்புண்டு.
அடுத்து மத்தியில் அமையக்கூடிய அரசு, மக்கள் எல்லோரின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்கக்கூடிய வகையில், திருநங்கைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவர்களுக்கு உரிய சட்ட திட்டங்களை வகுக்க வேண்டும். நான் நிறைய வெளிநாடுகளில் பயணப்பட்டு இருக்கிறேன். அங்கெல்லாம் தனிமனித உரிமைகளுக்கு மதிப்பளித்து சட்டங்களும் நெறிமுறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த நிலை நம் இந்தியாவிலும் வரவேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.