மதுரை: ஒமைக்ரான் வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு, மதுரை விமானநிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தென் ஆப்பிரிக்காவில் உருவான புதிய வகை உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங், பிரேசில் உள்ளிட்ட நான்கு நாடுகளில் மட்டுமே பரவியிருந்த ஒமைக்ரான் வைரஸ், தற்போது உலகின் 30 நாடுகளில் பரவியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தால் குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் உயர் எச்சரிக்கை நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகையால், அந்நாடுகளிலிருந்து வருகை தரக்கூடிய நபர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் விமான நிலையங்களில் மேற்குறிப்பிட்ட நான்கு நாடுகளிலிருந்தும் 477 பேர் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் எவரும் ஒமைக்ரான் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகவில்லை எனத்தெரியவந்துள்ளது.
அதேபோன்று மதுரை விமானநிலையத்திலும் பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் சுகாதாரத்துறையும் இந்தியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.
ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்குக் குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஆகும் என்பதால், அக்குறிப்பிட்ட விமான நிலையங்களில் அவர்களைத் தங்க வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நெகட்டிவ் எனத் தெரிந்த பிறகு அவர்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும், வீடுகளில் அவர்கள் 7 நாட்களுக்குத் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவதோடு, அவர்கள் தொடர்ந்து சுகாதாரத்துறையின் மூலமாக கண்காணிக்கப்படுவார்கள்.
ஒமைக்ரான் வைரஸ் குறித்து முழுமையாக இன்னும் தெரியவில்லை. ஆகையால், அதன் தன்மை, வேகம் ஆகியவற்றைப் பொறுத்து என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படலாம் என்பது குறித்து தெரியவரும்.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தற்போது தமிழ்நாடு முழுவதும் 78 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. இருந்தபோதும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் எனத் தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கரோனாவைத் தொடர்ந்து, ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா ஆகியவற்றைத் தொடர்ந்து ஒமைக்ரான் வந்துள்ளது. ஆகையால் தடுப்பூசி என்பது உயிர்ப்பாதுகாப்பு தொடர்புடையது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.