தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளுக்கு பத்திரப்பதிவு... 7 பேர் பணியிடைநீக்கம்....

தேனி அருகே சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், 123 பதிவுத் துறை அலுவலர்களுக்கு மெமோ வழங்கப்பட்டதோடு 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 19, 2022, 10:00 AM IST

மதுரை:தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சரவணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், வீரபாண்டி பகுதியில் அரசின் அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை மோசடியாக விற்பனை செய்வதுடன், சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்கின்றனர். இதனால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. உள்ளாட்சி பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத நிலம், மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் உள்ளது.

இதைப் பின்பற்றாமல், தேனி சார்பதிவாளர் உஷாராணி முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுக்கிறார். இவரது அலுவலகத்தில் முறைகேடாக, பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் நேற்று (அக்.18) விசாரித்தனர். அப்போது அரசுத் தரப்பில், பத்திரப்பதிவு திருத்த சட்டம் 22-ஏ அமலான பிறகு, 2017 முதல் 31 ஆயிரத்து 625 அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைப்பிரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 123 பதிவுத் துறை அலுவலர்கள் மீது என் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என மெமோ வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, 7 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதோடு அதில் 6 பேருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 20 பேரின் பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற மனை பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு உள்ளது. விதிமீறல் பதிவுகளை ஆய்வு செய்வது தொடர்பான குழு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

விதிமீறல் மனைப்பிரிவுகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க கூடாது என ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மெமோ வழங்கப்பட்டதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ‘சட்டவிரோதமாக பத்திரபதிவு செய்தவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details