நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லையில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2021ஆம் அதிமுகவை அகற்றுவதற்கான முன்னோட்டம். இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு முறைகேடு ஊழல் நடந்துள்ள இந்த ஆட்சியை அகற்ற வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியே தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தால்கூட இத்தனை திட்டங்களை நிறைவேற்ற முடியாது. ஆனால் பாஜவின் முகமூடியாக இருக்கும் அதிமுக அரசு ஆர்எஸ்எஸ் விருப்பத்தை நிறைவேற்றிவருகின்றது. இந்த மாநில அரசு நீக்கப்பட வேண்டும் என நாங்கள் முக்கியமாக கூறுவது அவர்கள் செய்துவரும் ஊழல்.
இதில் சிதம்பரம் வழக்கில் காட்டும் தீவிரத்தை எடப்பாடி வழக்கில் சிபிஐ காட்டவில்லை. காரணம் சிதம்பரம் போராளியாக இருக்கிறார். எடப்பாடி பணிகிறார். ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு லட்டு போன்றவர். ரேஷன் கார்டு கேட்டு ஒரு குடும்பம் போகிறது.
அவர்களை, 'நீங்கள் காங்கிரஸ் திமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள். அவர்களிடம் போய் கேளுங்கள்' எனச் சொல்லுகிறார். இவரைப் போல இன்னும் சில அமைச்சர்கள் இருந்தால் எங்கள் தேர்தல் வெற்றி எளிதாகிறது.
மக்கள் பிரதிநிதியாக இருப்பததால்தான் உங்களை வந்து பார்க்கிறார்கள். அவர்களை அப்படி சொல்லக் கூடாது. தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் உள்ளது. இவர்கள் திட்டங்களை நிறைவேற்றுகிறோம் என்பது தவறான விஷயம்.
இவர்களிடம் எந்தவித ஒரு பொருளாதார வசதியும் கிடையாது. தமிழ்நாடு அரசு மத்திய அரசிடமிருந்து எந்த ஒரு நிதியையும் கேட்டு போராடி பெறாமல் விட்டுவிடுகிறது. மாநிலத்தின் உரிமைகளை பெற முடியாமல் போய்விடுகிறது. இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறினார்.
நெல்லை மூலக்கரைப்பட்டி அருகே அம்பலத்தில் பணப்பாட்டுவாடா நடந்ததாக திமுக உள்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு,
"மாநில அரசு ஏராளமான பணத்தை இந்தத் தொகுதியில் கொடுத்துள்ளனர். அவர்கள், 'நாங்கள் எல்லாம் கொடுத்து முடித்த பிறகு அலுவலர்கள், காவல் துறையினர், தேர்தல் ஆணையம் நீங்கள் உங்கள் வேலையைத் தொடரலாம்' என்று சொன்னதும் இவர்கள் யாரையோ பிடிக்கிறார்கள். இது ஆளுங்கட்சியின் சூழ்ச்சியாக கூட இருக்கலாம்" என்று பதிலளித்தார்.
தொடர்ந்து ராஜிவ் காந்தி படுகொலை குறித்து சீமான் பேசிய கருத்து குறித்து கேள்விக் கேட்கப்பட்டது. அதற்கு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்வதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. இலங்கை தமிழர் பிரச்னையில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு சீமான் போன்றோர் செய்ததை விட காங்கிரஸ் கட்சி அதிகம் செய்துள்ளது என்றார்.
காங்கிரஸ் தலைவர் அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பு