தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை வளர்ச்சிக்கான நகர வளர்ச்சிக் குழுமம் அமைப்பு - முதலமைச்சர் அறிவிப்பு

பெரிய, பெரிய திட்டங்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவுக்கு ஒரு தனிமனிதனின் விருப்பத்துக்கும், தேவைக்கும் முக்கியத்துவம் தரும் அரசாக நாங்கள் இருப்போம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

cm stalin annocement
முதலமைச்சர் அறிவிப்பு

By

Published : Jan 21, 2022, 4:58 PM IST

மதுரை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

மதுரை மாவட்டத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த அறிவிப்புகள்,

*சங்கம் வளர்த்த மதுரையில் மாபெரும் நூலகம் அமையப் போகிறது. அதுவும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் அமையப் போகிறது. 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அது கட்டப்பட இருக்கிறது. 2.70 ஏக்கர் நிலத்தில் - 2,13,288 சதுர அடி கட்டடப் பரப்பில் - 8 தளங்களுடன் அமையப் போகிறது. இந்த நூலகத்துக்குத் தேவையான நூல்கள், மின் நூல்கள், இணையவழி பருவ இதழ்கள், ஆகியவை வாங்க 10 கோடி ரூபாயும், தொழில்நுட்ப சாதனங்கள் வாங்குவதற்கு 5 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்ய இருக்கிறார்கள். காலத்தால் அழிக்க முடியாத அறிவுக்கருவூலமாக கலைஞர் நினைவு நூலகம் அமையப் போகிறது. அதுவும் மதுரை மண்ணில் அமையப் போகிறது என்பது உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் பெருமையாகும்.

*அதேபோல் மதுரை நகரை மேம்படுத்துவதற்காக மதுரை நகர வளர்ச்சிக் குழுமத்தை உருவாக்கி இருக்கிறோம். மதுரையில் மக்கள்தொகையின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. எனவே அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கித் தர வேண்டியது ஒரு அரசின் கடமையாகும். அந்தக் கடமையை, இந்த அரசு அமைந்ததும் உணர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். 1972ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் முதன்முதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை உருவாக்கினார். அதுதான் சென்னையை நவீன சென்னையாக உருவாக்கியது. அந்த வரிசையில் மதுரை நகர வளர்ச்சிக் குழுமத்தை தொடங்கிவைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதை எண்ணி நான் பெருமையாகக் கருதுகிறேன். இதன்மூலமாக மதுரை மாநகருக்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தித் தர உள்ளோம். இந்த வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து செயல்படுத்த 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்.

*மதுரையானது மாமதுரையாக, அழகான மதுரையாக, எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற மதுரையாக மாற்றிக் காட்டப்படும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக, இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் உறுதி அளிக்கிறேன்.

*மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை வசதிகளை அமைக்கவும், இந்த வசதி ஏற்கனவே உள்ள பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளை மேம்படுத்தவும் 500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும்.

*மதுரை நகரின் மையப் பகுதியில் தற்போது அமைந்துள்ள பல்வேறு மொத்த விற்பனை சந்தைகள் அனைத்தையும் புறநகர் பகுதிகளுக்கு மாற்றி, நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான திட்டம் 50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்.

*உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே தீ விபத்தில் சேதடைந்த வீரவசந்தராயர் மண்டபம் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் புனரமைக்கப்படும். திருப்பணிகளும், புனரமைப்புப் பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்.

*மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு மொத்த விற்பனை சந்தைகள் அனைத்தையும் புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்றி, நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஒரு திட்டம் 50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்.

*மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, 100 கோடி ரூபாய் மதிப்பில் வைகை ஆற்றின் வடகரையில் உள்ள சாலையை நீட்டிப்பதற்கும், மேலக்கல் சாலையை அகலப்படுத்துவதற்கும் தேவையான பணிகள் செயல்படுத்தப்படும்.

*நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை, மாநகராட்சிக்கு வெளியே புதிய இடத்திற்கு மாற்றி அமைக்கப்படும். தற்போது உள்ள அந்த சிறைச்சாலை இடம், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் பசுமைப் பகுதியாக மேம்படுத்தப்படும். வண்டியூர், செல்லூர், தென்கரை ஏரிப்பகுதிகள், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் பொது பயன்பாட்டு இடங்களாக மேம்படுத்தப்படும்.

*விரகனூர் சந்திப்பு, அப்போல்லோ மருத்துவமனை சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு, இராஜாஜி மருத்துவமனை சந்திப்பு போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் சந்திப்புகளில், புதிய மேம்பாலங்களை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.

*தொழில் வளர்ச்சியில் மதுரை மாவட்டத்தை முன்னிறுத்தும் வகையில் மதுரையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும்.

*உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்துவிட்ட பண்பாட்டு அடையாளமான ஏறு தழுவுதலை நம் வீர விளையாட்டை முறைப்படுத்தி பாதுகாப்பது நம் கடமையாகும். உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மாபெரும் அரங்கம் ஒன்று மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் அமைக்கப்படும். தமிழரின் வீர விளையாட்டுகள், பாரம்பரிய காளை இனங்கள் குறித்த அருங்காட்சியகம் ஒன்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பாதுகாப்புடன் போட்டியை கண்டு களிக்கக்கூடிய வகையில் நிரந்தர அரங்கம், வீரர்கள், காளைகளின் நலம் காக்க மருத்துவமனைகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக இந்தத் திட்டம் அமையும்.

இன்றைய நாள் 51.77 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 49.74 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளைத் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாக கிடைத்த மனுக்கள், முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலமாக கிடைத்த மனுக்கள் என்ற வகையில், எங்களுக்கு 40 ஆயிரத்து 978 மனுக்கள் கிடைத்துள்ளன. இதில் முதல் கட்டமாக 23 ஆயிரத்து 879 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 67 ஆயிரத்து 831 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வழங்கப்படுகின்றன. இதன் மதிப்பு 219 கோடி ரூபாய் ஆகும். மொத்தமாக இன்றைய நாள் (ஜன.21) மட்டும் 342.33 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மக்களுக்குக் கிடைத்துள்ளன.

*மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆறு தளம் கொண்ட கல்விக் கூடம்
*5 தளம் கொண்ட குடியிருப்பு வளாகம்
*குருவிக்காரன் சாலையில் உயர்மட்ட மேம்பாலம்
*முடுக்குவார் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள்
*மணியாஞ்சியில் கூடுதல் வகுப்பறைகள்
*யா.ஒத்தக்கடையில் கூடுதல் வகுப்பறைகள்
*செல்லம்பட்டி, கருப்பட்டி, அரசப்பட்டியில் அங்கன்வாடி கூடங்கள் ஆகியவை இன்று(ஜன.21) திறக்கப்படுகின்றன.

ஊரின் தேவை, ஒரு வட்டாரத்தின் தேவை, ஒரு தெருவின் தேவை, தனிப்பட்ட ஒரு மனிதனின் தேவை என்ன என்பதைக் கேட்டறிந்து நிறைவேற்றித் தரும் அரசாக இந்த அரசு இருக்கும். மைக்ரோ அளவிலான பிரச்சினையையும் கூர்மையாக பார்த்து நிவர்த்தி செய்யும் அரசாக இந்த அரசு இருக்கும். பெரிய, பெரிய திட்டங்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவுக்கு ஒரு தனிமனிதனின் விருப்பத்துக்கும், தேவைக்கும் முக்கியத்துவம் தரும் அரசாக நாங்கள் இருப்போம். அதனால்தான் ஒட்டுமொத்தமாக மதுரை வளர்ச்சிக்கான நகர வளர்ச்சிக் குழுமத்தை அமைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெற்றி... வெற்றி... வெற்றி! வாகைசூடிய வீரத்தமிழச்சி யோகதர்ஷினி

ABOUT THE AUTHOR

...view details