மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் இது முதல்படை வீடாகும். 15 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 30ஆம் தேதி பட்டாபிஷேகம், 31ஆம்தேதி திருக்கல்யாணம், ஏப்ரல் 1 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
முதல் படை வீட்டில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனிப் பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
கடந்த வருடம் கரோனா தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கால் இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டது. பங்குனி திருவிழாவின் முதல் நாளான இன்று காலையில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமிமிக்கு சர்வ அலங்காரமும் சிறப்பு பூஜையும் நடந்தது.
இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க இருப்பிடத்திலிருந்து சாமி புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அடுத்த 15 நாள்களும் காலை, இரவு என இரு வேளையிலும் ஒவ்வொரு வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.