மதுரை:முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து ஒரு வாரமாக உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான மலைமேல் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யும் விழா சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது. கோவில் உற்சவரான சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
வைரக்கல் பதித்த கிரீடத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி கையில் செங்கோல் பிடித்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.