மதுரை திருமங்கலம் தொகுதியில் அமமுக கட்சியின் சார்பாக வேட்பாளராக மருது சேனை இயக்கத் தலைவர் ஆதிநாராயணன் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை எதிர்த்து இவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த முன்பிணை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
நான் மருது சேனை இயக்கத் தலைவராக உள்ளேன். தற்போது நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் மார்ச் 14ஆம் தேதி திருமங்கலம் அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோயில் முன் நின்றுகொண்டு வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தகாத சொற்களால் திட்டியதாகவும் கூறி டி. கல்லுப்பட்டி காவல் துறையினர் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. எந்த விசாரணையும் செய்யாமல் காவல் துறையினர் வேண்டும் என்றே என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி வழக்குத் தொடர்ந்துள்ளனர். எனவே இந்த வழக்கில் என்னை கைதுசெய்யாமல் இருக்க முன்பிணை வழங்க வேண்டும். மேலும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றுவேன்.