மதுரை:மதுரை புதூர் கண்ணேனந்தல் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் 23 வருடங்களாக மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன். அதன்மூலம், வெளிநாடுகளில் நடந்த பாரா ஒலிம்பிக் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொண்டு பல வீரர்களை வெற்றி பெற வைத்துள்ளேன். இதில் குருநாதன் என்ற விளையாட்டு வீரர் வெளிநாடுகளில் நடந்த மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பல போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 26 பதக்கங்களை வென்றுள்ளார்.
மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் குருநாதன் என்ற வீரர் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் கலந்து கொண்டு நமது நாட்டிற்கு சிறப்பு செய்துள்ளார். இந்திய அளவிலும், மலேசியா, லண்டன், துனீசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச போட்டிகளிலும் தேசிய, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று நமது நாட்டிற்கு சிறப்பு செய்துள்ளார். இவர் தற்போது தற்காலிக பணியாளராக பணிபுரிந்துவருகிறார். இவருக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகளில் சாதனை படைத்த பல வீரர்கள் அரசு பணியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கும் அரசு நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
நீதிபதி கிருபாகரன் அமர்வு
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், "மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அவற்றைப் பெறுவதற்கு அவ்வீரர்கள் பதிவு செய்திருக்க வேண்டும்" என தெரிவித்தனர்.