உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து வெகு சிறப்பாக நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் பொருட்டு நடைபெற உள்ள ஆன்மீக நிகழ்வின், முதல் வைபவமாக மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நேற்று (ஏப். 1) காலை யாகபூஜைகள் நடைபெற்றன. அடுத்ததாக மதுரை வண்டியூர் அருகேயுள்ள வைகை ஆற்றின் நடுவே அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
தொடர்ந்து மறுக்கப்படும் உரிமை:இந்நிகழ்வுக்கு முன்பாக முகூர்த்தக்கால் மற்றும் கும்பங்களுக்கு, அழகர் கோவிலின் அம்பி பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு தேனூரைச் சேர்ந்த கிராம பெரியவர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறையைச் சார்ந்த அலுவலர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வுகள் நடைபெற்றவுடன், தேனூர் பொதுமக்கள், தங்களின் பாரம்பரிய உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறையிடம் பலமுறை கோரிக்கைகள் வைத்த பின்னரும் கூட தொடர்ந்து தேனூர் கிராமத்து உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினர்.
வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தை பாரம்பரிய வழக்கப்படி, அழகர் மூன்று முறை சுற்றி வர வேண்டும். மேலும், மண்டபத்தின் நடுவே அழகரைக் கொண்டு வைத்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பாரம்பரிய வழக்கங்கள் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன.
இதற்காக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உரிய தீர்ப்பு வழங்கியும்கூட இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கண்டு கொள்ள மறுக்கின்றனர் என அழகர் கோவில் இணை ஆணையர் அனிதா முன்பாக கோரிக்கை வைத்தனர்.
தேனூருக்கான முக்கியத்துவம்:அடுத்த ஆண்டும் இதே போன்ற நடைமுறை தொடருமானால், ஒட்டுமொத்த தேனூர் கிராமமும் இந்த விழாவைப் புறக்கணிக்க நேரிடும் என்று தேனூரைச் சேர்ந்த நாட்டாமை மோகன் குரல் எழுப்பினார். அவரைத் தொடர்ந்து அவ்வூரைச் சேர்ந்த சுழியம் நற்பணி மன்ற நிர்வாகி கார்த்திகைக்குமரன் பேசுகையில், "பிற மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருள்வதற்கு, மண்டகப்படி உரிமைதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால், தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்வதற்கு கடந்த நானூறு ஆண்டுகளாக தேனூர் கிராமத்தாருக்கு அழகர் சார்பாக கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையிலிருந்தே தேனூருக்கான முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணர வேண்டும். அதிகாரிகளுக்கு இந்த வரலாற்றை எடுத்துச் சொல்ல வேண்டிய பட்டர்கள், வெறுமனே வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல" என்றார்.
அவ்வூரைச் சேர்ந்த ராஜா கூறுகையில், "வரும் ஆண்டிலும் இதே நடைமுறை தொடருமானால், தேனூர் மண்டபத்தில் நடைபெறும் அனைத்து வைபவங்களையும் தேனூர் கிராமத்து மக்கள் புறக்கணிக்க நேரிடும். மேலும் எங்களது உரிமைகளை மீட்பதற்காக மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறோம். இதனைச் சரி செய்ய வேண்டியது இந்து சமய அறநிலையத்துறையின் கடமையாகும்" என்றார்.
அழகர் கோவில் இணை ஆணையர் அனிதா, தேனூர் கிராமத்தாரின் கோரிக்கைகள் குறித்து முழுவதுமாகக் கேட்டறிந்தார். வரும் ஆண்டில் அவை அனைத்தையும் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு: எவ்வளவு அதிகம்...? என்னென்ன மாற்றம்...?