மதுரை: மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ள மலர் வணிக வளாகத்தில் மதுரையிலிருந்து மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் மொத்த விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இதில், மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து உள்ள காரணத்தால் தமிழ்நாடு மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் நல்ல விற்பனை சந்தை உண்டு. அதன் காரணமாக மதுரை விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மதுரை மல்லிகை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று மதுரை மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூ.2000, முல்லை மற்றும் பிச்சிப் பூக்கள் தலா ரூ.800, சம்பங்கி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.150, அரளி ரூ.250, செண்டு மல்லி ரூ.80 என விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மல்லி கடும் விலையேற்றம் இதுகுறித்து சில்லறைப் பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், 'மதுரை மல்லிகையைப் பொறுத்தவரை பூவின் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக மதுரைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விலை நிலவரம் மேலும் ஒரு சில நாட்கள் நீடிக்கும்' என்றார்.
இதையும் படிங்க:சென்னையில் சமத்துவ பிள்ளையார் வழிபாடு