தீபாவளியை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை
மதுரை: தீபாவளியை முன்னிட்டு மலர் சந்தையில் இன்று மல்லிகைப் பூ கிலோ ரூபாய் 1,400 என விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ளது மலர் சந்தை. மதுரை மாவட்டம் மட்டுமன்றி தென் மாவட்டங்களிலிருந்தும் இங்கு பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை அனைத்து பூக்களின் விலை மிக மிக குறைவாக இருந்தது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு மலர் சந்தையில் தற்போது பூக்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ. 250 ஆக இருந்த நிலையில், இன்று ரூபாய் ஆயிரத்து 400 ஆக உயர்வு கண்டுள்ளது.
பிற பூக்களின் விலையும் கடுமையான ஏற்றத்தை சந்தித்துள்ளது. கனகாம்பரம் ரூ.1,500, செவ்வந்தி ரூ.250, அரளி ரூ.200, முல்லை ரூ.600, பிச்சி ரூ.500, ரோஸ் ரூ.250 என விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த சில நாள்களில் பூக்களின் விலை உச்சத்தைத் தொடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.