மதுரை: உசிலம்பட்டி அருகேவுள்ள பாப்பாபட்டியில் இன்று (அக். 2) ஸ்டாலின் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின், “கிராமங்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவின் வளர்ச்சி உள்ளது. மூன்றாவது அரசாங்கமாக இயங்கும் உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவது மிக மிக அவசியம்.
பல ஆண்டுகளாக பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது, தமிழ்நாடு முதலமைச்சராக கருணாநிதி இருந்தார், நான் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தேன்.
கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றப் பின்னர் பல்வேறு வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறோம். அந்த அடிப்படையில் உசிலம்பட்டி மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும்.
இந்தக் கிராம சபைக் கூட்டத்திலும் கிராமம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை கண்டிப்பாகத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும்” என உறுதியளித்தார்.