கரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறிவிடாமல் இருப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மதுரை மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறை, சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகின்றன.
மக்கள் காய்கறிகள் வாங்குவதற்காக நேரடி விநியோகம், சமூக இடைவெளியுடன் கடைகள் அமைத்தல் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதற்கிடையே இறைச்சிக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரிப்பதையொட்டி, மதுரை மாநகர் ஆட்டிறைச்சி சில்லறை விற்பனையாளர்கள் சங்கம், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை இறைச்சிக்கடைகள் மூடப்படும் என அறிவிப்பு செய்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர், மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட உணவு வழங்கல் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், ஏப்ரல் 14ஆம் தேதி வரை இறைச்சிக்காக ஆடுகள் வதை செய்யப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 14ஆம் தேதி வரை மதுரை மாநகரில் இயங்கும் ஆட்டிறைச்சிக்கடைகள் மூடப்படும் இதற்கிடையே சில ஊடகங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் ஆட்டிறைச்சிக் கடைகள் மூடப்படுவதாக செய்திகள் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஆட்சியர் டி ஜி வினய் அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆனால் இறைச்சிக்கடைகளின் இந்த முடிவு காரணமாக பொதுமக்கள் பலர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.