மதுரை: மீனாட்சி அம்மன் கோயில், வைகையாறு போலவே மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது ஏவி பாலம் எனப்படும் ஆல்பர்ட் விக்டர் பாலம். வைகை ஆற்றின் குறுக்காக மதுரையின் வடக்குத் தெற்குப் பகுதிகளை இணைக்கிறது இந்தப் பாலம்.
மதுரையின் குறுக்கே ஓடும் வைகை நதியைக் கடக்க, உயர்மட்ட பாலம் ஒன்றை அமைப்பதற்காக, 1886 டிசம்பர் 8ஆம் தேதி அன்றைய பிரிட்டிஷ் அரசின் வைசிராயாகவும், கவர்னர் ஜெனரலாகவும் இருந்த எர்ல் ஆஃப் டஃப்ரைன் என்பவரால் அடிக்கல்நாட்டப்பட்டது. கருங்கற்கள் கொண்டுகட்டப்பட்ட இந்தப் பாலத்தின் பணிகள் இரண்டாண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குத் தயார்செய்யப்பட்டது.
திட்ட மதிப்பைவிட குறைந்த செலவில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த உயர்மட்டப் பாலத்தின், அன்றைய கட்டுமான செலவு இரண்டு லட்சத்து 85 ஆயிரத்து 687 ரூபாயாகும்.
பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய கல்வெட்டு ஆங்கிலேயர் காலத்தில், மதுரையை விரிவாக்கம் செய்யும் முயற்சிகள் நடந்தன. அதன் ஒரு பகுதியாக, மதுரை கோட்டையின் சுவர்கள் அகற்றப்பட்டு, அதன் கற்களைக் கொண்டு யானைக்கல் - செல்லூர் பகுதியை இணைக்கும் வகையில் தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.
வைகையின் வெள்ளக்காலங்களில், இந்தத் தரைப்பாலம் மூழ்கிவிடுவதால், தெற்கிலிருந்து வடக்கிற்குச் செல்வது சிரமமாக இருந்தது. இதனால் ஏவி மேம்பாலம் அமைந்துள்ள பகுதியில், வெள்ளையர்களின் சாரட் வண்டிகள் செல்வதற்காக, மூங்கில் கழிகளால் பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலத்தில் செல்லும்போது, சாரட் வண்டியின் சக்கரங்கள் சிக்கிக்கொண்டன. அதன்பிறகு ஓர் உயர்மட்ட பாலம் அமைக்க ஆங்கிலேயர்கள் முடிவுசெய்தனர்.
வைகையின் குறுக்கே, ஏறக்குறைய 300 மீட்டர் நீளத்திற்கு நீண்டுகிடக்கும் இந்த ஏவி பாலம் ஆங்கிலேயர்களின் கட்டடக்கலைக்குச் சான்றாகவும் திகழ்கிறது. 15 வளைவுகளைக் கொண்ட இந்தப் பாலத்தின் மீது விழும் மழைத்துளிகள், வழிந்து வைகை ஆற்றுக்குள்ளேயே விழும்படி, ஒவ்வொரு வளைவின் இரண்டு பக்கங்களிலும் அழகிய தூம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாலம் கட்டிமுடிக்கப்பட்டு, அதனைத் திறந்துவைக்க அப்போதைய பிரிட்டிஷ் இளவரசர், ஆல்பர்ட் விக்டர் வருவதாக இருந்தது. அப்போது மதுரையில் ப்ளேக் நோய்த்தாக்குதல் அதிகமாக இருந்ததால், அவரது பயணம் தவிர்க்கப்பட்டது. இருந்தபோதிலும் பாலத்திற்கு அவதது பெயரே வைக்கப்பட்டது என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.
ஐம்பது ஆண்டுகள் ஆயுள் நிர்ணயிக்கப்பட்டாலும், மதுரையின் பல்வேறு காலச்சூழ்நிலைகளைத் தாங்கி, நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் இந்த ஏவி பாலத்தை யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் எனவும், பாலத்தில் உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் மதுரை மக்களிடம் தற்போது எழுந்துள்ளது.
இதையும் படிங்க:திருக்கோயில்களில் உள்ள சிலைகளை பாதுகாக்க போதிய பாதுகாவலர்களை பணியமர்த்தக் கோரி வழக்கு!