மதுரை:தமிழர் பண்பாட்டை கண்டால் வயிறு எரிகிறதா, நல்லா எரியட்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," உலகப் பொதுமறையாகக் இருக்கக்கூடிய திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
உலகெங்கும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கைகளை உருவாக்கி, அதன் வாயிலாக தமிழாய்வுகள் கடல் கடந்த தேசங்களில் உள்ள நாடுகளிலும் பெருமளவு நடைபெறுவதற்கும், தமிழரின் பெருமையை தெரிந்து கொள்வதற்கும் திட்டங்களை வகுத்து செயல்படுத்த தமிழ் வளர்ச்சித் துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழர் பண்பாட்டை கண்டால் வயிறு எரியுதா.. நல்லா எரியட்டும்! தமிழின் வளர்ச்சி, பெருமை மற்றும் தொன்மை என தமிழருக்கு தனி சிறப்புகள் உள்ளன. தமிழ் இலக்கியச் சான்றுகள் மட்டுமின்றி வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன.
அதனை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க தமிழ்நாடு தொல்லியல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இதற்காகத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தமிழர்களின் தொன்மை வரலாறு உள்ளிட்டவை அறிவியல்பூர்வமாகத் தெரிகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு வெள்ளியிலான முத்திரை காசு கீழடியில் கிடைத்தது. கிறிஸ்து பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டுகள் முன்பாக இந்த நாணயம் புழக்கத்தில் இருந்து இருக்க வேண்டும் என்கிறார்கள்.
அப்படியானால் மௌரியர்கள் மற்றும் நமக்கும் வணிகத் தொடர்பு இருந்திருக்கிறது. கங்கைச் சமவெளிக்கும், வைகைச் சமவெளிக்கும் இருக்கக்கூடிய தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவர்களுடைய காசு நம்மிடத்தில் கிடைக்கிறது என்றால், வணிக குழுக்கள் அங்கிருந்து இங்கே வந்திருக்கிறார்கள் என்பதற்கு இது சான்று.
நாகரிகம் மிகுந்த ஒரு சமுதாயம், வணிகம் மேற்கொண்டு இருக்கக்கூடிய ஒரு சமூகமாக தமிழர்களாகிய நாம் இருந்திருக்கிறோம் என்பதற்கு இலக்கிய சான்று மட்டுமல்லாது இது அறிவியல் பூர்வமான சான்றாகவும் அமைந்துள்ளது.
இத்தனை சான்றுகள் கிடைக்கும்போது, அதை எல்லாம் ஏற்றுக் கொள்வதற்கு சிலருக்கு இன்று மனம் வரவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழின் பெருமை, தமிழனின் பெருமை உலகளாவில் எழுந்து வருவதில் சிலருக்கு வயிறு எரிகிறது.
அந்த வயிறு நன்றாக எரியட்டும். நான் அவர்களுக்கு சொல்வது.. நீங்கள் வயிறு எரிவதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் தொடர்ந்து இந்த அகழாய்வுப் பணிகளை மேற்கொள்வோம்.
தமிழின் பெருமையை, தமிழரின் பெருமையை, தமிழரின் தொன்மையை நாம் அறிந்து இருக்கக்கூடிய சான்றுகளின் வாயிலாக அறிவியல் பூர்வமாக பண்பாட்டு தளத்தில் தொடர்ந்து நிறுவுவோம்.
உலகளாவிய தமிழர்களுக்கு, நமது இனம் குறித்த பெருமை அறிய இத்தகைய அகழ்வாய்வு தேவை. ஆனால் இது தேவையற்றது என்று சில வேலையற்றவர்கள் கூறினால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
அவர்களுக்கு வயிறு நன்றாக எரியட்டும். ஆனால், பேரறிஞர் அண்ணா சொன்னது போல, இந்த பண்பாட்டு தீ, தமிழ் நாகரீக பண்பாட்டு தீ, அகிலமெல்லாம் பரவட்டும்.. தீ பரவட்டும்.. நமது உணர்வு பொங்கட்டும்.. பொங்கட்டும். திருமங்கலம் கல்லுப்பட்டி பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் பழங்கால தொல்லியல் பொருள்கள் காரணமாக, அங்கு ஆய்வுகள் நடைபெறுமா என்ற கேள்விக்கு, தொன்மைக்கான அடையாளங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. ஆனால் இதனை தொல்லியல் துறையோடும், முதலமைச்சரோடு கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்" என்றார்.
இதையும் படிக்கலாமே: கீழடியின் கொடை குறைவதில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு நெகிழ்ச்சி