தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆக்கிரமிப்பை தடுக்க தாலுகா அளவில் குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - மதுரை நீதிமன்ற செய்திகள்

நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை தடுக்க கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், காவலர், பொதுப்பணித்துறை அலுவலர் உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Dec 24, 2020, 8:30 PM IST

மதுரை: மதுரை பீ.பீ. குளத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில்," மதுரை, பீ.பீ.குளம், நேதாஜி மெயின்ரோடு பகுதியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டி சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு மின் இணைப்பு, ஆதார் மற்றும் குடும்ப அட்டை, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவை அரசால் வழங்கப்பட்டுள்ளது.

நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளோம். இதுவரை வழங்கப்படவில்லை. ஆக்கிரமித்துள்ள இடத்தை 21 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டுமென பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

எங்களுக்கு செல்வதற்கு வேறு இடம் இல்லை. நாங்கள் அனைவரும் தினக்கூலிகள். அந்த இடத்தை விட்டு வெளியேற்றினால் கடுமையாக பாதிக்கப்படுவோம்.

எனவே, அங்கிருந்து எங்களை வெளியேற்றக் கூடாது எனவும், உதவி பொறியாளர் நோட்டீசிற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனவும் கோரியிருந்தார். இதேபோல் மேலும் பலர் மனு செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, "வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்கள் குடியிருக்க குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று இடம் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியில் குடியிருப்போர் 4 மாதத்தில், இடத்தை காலி செய்வதாக உறுதிமொழி பத்திரம் கொடுக்க வேண்டும். உத்தரவாதம் அளிக்காதவர்களின் வீடுகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்” என்றனர்.

மேலும், “இந்த ஆக்கிரமிப்பை தடுக்க அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில் தாலுகா அளவில் கிராமநிர்வாக அலுவலர், தாசில்தார், காவல்துறை, பொதுப்பணித்துறையினர் உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் உத்தரவிட்டனர்.


இதையும் படிங்க:நீதிபதி வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்ட வழக்கு - ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது வழக்கு

ABOUT THE AUTHOR

...view details