மதுரை: தமிழ்நாட்டில் கல்வி கற்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரால் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பின்பு இத்திட்டம் 1982ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரால் சத்துணவுத் திட்டமாகப் புதிய மாற்றம் கண்டது.
அவர்களுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பலராலும் இன்றுவரை, இந்தத் திட்டம் பல்வேறு கூடுதல் அம்சங்களோடு தொடர்ச்சியாக மெருகேற்றப்பட்டுவந்தது.
மெருகேற்றப்பட்ட திட்டம்
கல்வி கற்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பின்னாளில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும்விதமாக மீண்டும், மீண்டும் கூடுதல் மாற்றங்கள் செய்யப்பட்டன. மதிய உணவுத் திட்டமாக அறிமுகமான போதும், பிறகு கூடுதலாக முட்டை, பயறு வகைகள், உருளைக்கிழங்கு, வாழைப்பழம், கலவை சாதம் எனத் தொடர் மாற்றங்களை இத்திட்டம் கண்டுகொண்டே வந்தது.
திட்ட நோக்கங்கள்
- இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக, ஆரம்பக் கல்வியில் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரித்தல்,
- இடைநிற்றலை குறைத்தல்,
- வறுமையால் வாடும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தினை உறுதிசெய்தல்,
- ஏழ்மையில் வாடும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பள்ளி வருகையை ஊக்குவித்தல்,
- முறையான கல்வி பெற உதவுதல்,
- பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல் ஆகியவையே ஆகும்.
கரோனா கால சிக்கல்
தற்போது நிலைமையே வேறு. கரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் இயங்காத நிலையில் வறுமையால் வாடும் குழந்தைகள் உணவு உண்பதை தமிழ்நாடு அரசு எவ்வாறு உறுதிசெய்கிறது?
இது குறித்து மதுரை அரசரடி அருகேயுள்ள ராஜம் வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர் சுலைகா பானு பேசுகையில், ”கரோனா காலத்தில் பள்ளி குழந்தைகளுக்காக நமது அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் சத்துணவுத் திட்டம் மிகச் சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவருகிறது.
அரசு உத்தரவு
கரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளிகள் இயங்கவில்லை. இதனைக் கருத்தில்கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தைகளின் ஊட்ட உணவை உறுதிசெய்யும் நோக்கிலான உத்தரவை தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அதன்படி குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி, பருப்பு, முட்டை ஆகியவை பள்ளிகள் மூலமாகவே, குழந்தைகளின் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டன.
இது குறித்து கிராமப்புற பெற்றோருக்கு தகவல் அளிக்க முடியாத நிலையிலும், ஆசிரியர்களே நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கிய நிகழ்வும் நடந்துள்ளன. பொதுவாக மே மாதம் கோடைகால விடுமுறை என்பதால், இத்திட்டத்திற்கு பள்ளி இயங்குகிற ஆண்டில் இந்த ஒரு மாதம் மட்டும் விதிவிலக்காகும்.