நாளுக்கு நாள் அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் இருந்து வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி பாடம் எடுக்க வேண்டிய கட்டாயம் உருவானது. இந்த நேரத்தில் பாலியல் சுரண்டலைப் பற்றி, பள்ளியைத் தாண்டி குடியிருப்புப் பகுதிகளிலும் விழிப்புணர்வு பாடம் நடத்தி வருகிறார் ஆசிரியர் சரவணன். மதுரையில் உள்ள திருஞானம் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியரியராகப் பணியாற்றி வரும் இவர், தனது விழிப்புணர்வு பாடத்தில் பொம்மைகளை பாடவும் பேசவும் வைக்கிறார்.
அதாவது பொம்மலாட்டம் மூலமாக பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தனது பள்ளியைச் சார்ந்த மாணவ-மாணவியர் வாழும் பகுதிகளுக்குச் சென்று பெண் கல்வி, இளவயது திருமணம், பாலியல் சுரண்டல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பொம்மலாட்டம் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவருடன் அந்தப் பள்ளியின் ஆசிரியர்களும் கைகோர்த்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை கரும்பாலைப் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்திற்குப் பிறகு, ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி ஊடகத்திற்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், " இது போன்ற விழிப்புணர்வு பிரசாரத்தை இதற்கு முன் தெரு நாடகங்கள் மூலமாக செய்து கொண்டிருந்தேன். தற்போது ஹைதராபாத் சென்று பொம்மலாட்ட பயிற்சி எடுத்து வந்ததற்குப் பிறகு, எனது வகுப்பிலேயே பொம்மலாட்டம் மூலமாகவே மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறேன். அதே யுக்தியை பயன்படுத்தி எங்களது பள்ளி மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு பாலியல் சுரண்டல், இளவயது திருமணம், பெண் கல்வி, ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் அதுகுறித்த பாதிப்புகளையும் பொம்மலாட்டம் மூலம் விளக்கி வருகிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பொம்மலாட்டம் மூலமாக ஒரு கருத்தை விளக்கிக் கூறும் போது மாணவ மாணவியரின் கவனம் சிதறாமல் ஒரு முகப்படுகிறது. இதற்குத் தேவையான பொம்மைகளை குழந்தைகளையே செய்ய வைத்து, அவர்கள் மூலமாகவே இந்த விழிப்புணர்வு நாடகங்களையும் நடத்தி வருகிறோம். இதுபோன்ற யுக்தியின் மூலமாக பாடங்களை மிக எளிதாக மாணவர்களுக்குக் கற்பிக்க முடியும். இதனை அனைத்து ஆசிரியர்களும் கற்றுக்கொண்டு இந்த முயற்சியைப் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.