தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம் - பிரமாணப் பத்திரம் தாக்கல் - இந்து அறநிலையத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல்

மதுரை: பெரிய கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்து அறநிலையத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

tanjore temple tamil issue, இந்து அறநிலையத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல், சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம்
tanjore temple tamil issue

By

Published : Jan 30, 2020, 7:54 AM IST

தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், தஞ்சை பெரிய கோயில் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது குடமுழுக்கு நிகழ்வை ஆகம விதிப்படி தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதனை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக குடமுழுக்கு வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ஆகமம் என்பது தமிழ் மொழிக்கானது. சமஸ்கிருதத்தில் அதற்கான பொருள் இல்லை. ஆனால் தமிழில் உண்டு. அதோடு ஆகமம் தமிழ்நாட்டில் மட்டுமே பின்பற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவிர பிற இடங்களில் இல்லை. ஆகம விதிகள் தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களில் பின்பற்றப்படுவதில்லை. ஆங்கிலப் புத்தாண்டின் போது இரவு நேர பூஜைகள் நடப்பதில் காலத்திற்கு ஏற்றார் போல மாற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் கடைசியாக சமஸ்கிருதத்தில் நடைபெற்றதாக கூறப்பட்டாலும் அதில் மாற்றம் கொணர்ந்து தமிழில் நடத்தலாம். ஆகவே தமிழிலேயே குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

அதற்கு, இந்து அறநிலையத்துறை சார்பில் யாகசாலையிலிருந்தே குடமுழுக்கு நிகழ்வு தொடங்கும். மகாபிசேகத்தின் போதும் திருமுறைகளைப் பாட ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் குடமுழுக்கை நடத்த வேண்டும் என்று இடைமனு தாக்கல் செய்த மைலாப்பூர் ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமஸ்கிருதம் என்பது பேசும் மொழியல்ல. தேவமொழி. ஆகவே சமஸ்கிருதத்தில் தஞ்சை குடமுழுக்கு நிகழ்வை நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து, குடமுழுக்கு நடைபெறும் அன்று கருவறை மற்றும் குடமுழுக்கு நடைபெறும் அனைத்து இடங்களிலும் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க...ஈழம் காக்க ஈகம் செய்த முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று !

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details