மதுரை:மதுரை புது நத்தம் சாலையில் 114 கோடி மதிப்பில் 2.61 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர்கள் மூர்த்தி, பெரியகருப்பன் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், "கலைஞர் நினைவு நூலகம் தரத்துடன் விரைந்து கட்டி முடிக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் தரக் கட்டுப்பாட்டுப் பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டு வருகிறது. கலைஞர் நினைவு நூலகத்தில் 3 தளப் பணிகள் முடிவடைந்துள்ளன. தரைதளம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் தள குழந்தைகள் மற்றும் முதியோருக்கு ஒதுக்கீடு, 2ஆம் தளம் கலைஞர் குறித்த தகவல்களுடன் அமைக்கப்பட உள்ளது.
2023 ஆம் ஆண்டிற்குள் பணிகள் நிறைவடையும்
போட்டித் தேர்வுகளில் இளைஞர்கள் பங்கேற்க 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. 63 ஆயிரம் ஆங்கில புத்தகங்கள் கொண்ட பிரிவும், 12 ஆயிரம் அரிய புத்தகங்கள் கொண்ட தனிப் பிரிவும் அமைக்கப்படவுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்புத்தனிப் பிரிவும் அமைக்கப்பட உள்ளது. அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட நூலகமாகக் கட்டப்பட உள்ளது. 2023 ஜனவரிக்குள் நூலகம் கட்டி முடிக்க அறிவுறுத்தல், பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்படும் கட்டடங்கள் புது உத்தியுடன் கட்டுவதால் பராமரிப்புப் பணி மிகக்குறைவாக உள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் சாலை விபத்து 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எ.வ.வேலு மேலும் அவர் கூறுகையில், ’பழனி - கொடைக்கானல் - மூணாறு சாலை அமைக்க முதல் கட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அகற்ற வேண்டிய சுங்கச்சாவடிகள் குறித்துக் கணக்கெடுப்பு செய்யத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கோரி உள்ளேன். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து 60 கிலோ மீட்டருக்குள் உள்ள சுங்கச்சாவடிகளின் பட்டியல் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் சாலை விபத்துகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த 10 மாதங்களில் தமிழ்நாட்டில் 15 விழுக்காடு சாலை விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் விபத்துகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படும்' எனக்கூறினார்.
இதையும் படிங்க:புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தர வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்