மதுரை:ஆளுநர் ஆர்.என். ரவி இன்றுமதுரையில் உள்ள உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம்செய்தார். தென் மாவட்ட சுற்றுப் பயணத்தில் ஒரு பகுதியாக இந்தத் தரிசனம் உள்ளது.
தென் மாவட்டங்களில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆர். என். ரவி நேற்று (டிசம்பர் 15) மதுரை வந்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஆர்.என். ரவி தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்ய வருகைதந்தார்.
பூரண கும்ப மரியாதை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகைதந்த ஆர்.என். ரவிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
கோயிலில் மூலவர், மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் முக்குருணி விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் ஆர்.என். ரவி தரிசனம்செய்தார். பின்னர், கோயில் உள் துறை அலுவலகத்தில் அவருக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆளுநர் வருகையை முன்னிட்டு கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் மு.வ. அரங்கில் நடைபெறும் அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
இதையும் படிங்க : ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் ரயில் மீண்டும் இயக்கம்