மதுரை:Tamilnadu Abuse cases increased:மதுரை கே.கே.நகரில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், தமிழக முதலமைச்சர் பட்ஜெட் உரையில் அறிவித்ததன் அடிப்படையில் இந்த மண்டல அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களுக்கு குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த அலுவலகம் நேரடியாக இயங்கும். பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றும்.
பாலியல் புகார் மீது உடனடி நடவடிக்கை
பாலியல் தொடர்பான புகார்கள் கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் தற்போதுதான் அதிகமான அளவில் வருகின்றன. அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்படுகின்றன. குழந்தைகள் பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களையே பயன்படுத்தாத நிலை கடந்த 10 ஆண்டுகளாக இருந்தது.
பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக உள்ள சிறார் நீதி சட்டத்தின்படியே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.