தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜல்லிக்கட்டுக்குப் பிறகு தமிழர்களை ஒருங்கிணைத்த சொல் கீழடி! - Tamilnadu Archaeological Commissioner's Speech

மதுரை: ஜல்லிக்கட்டுக்குப் பிறகு உலகில் வாழுகின்ற அனைத்துத் தமிழர்களையும் ஒருங்கிணைத்த ஒரு சொல் கீழடி என்று தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் த. உதயச்சந்திரன் கூறியுள்ளார்.

கீழடி தேசிய கருத்தரங்கு
கீழடி தேசிய கருத்தரங்கு

By

Published : Dec 21, 2019, 11:28 AM IST

மதுரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் கீழடி குறித்த தேசிய கருத்தரங்கு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இறுதி நாளான நேற்று ஒடிசாவைச் சேர்ந்த சுனில்குமார் பட்நாயக், முனைவர் பாலகிருஷ்ணன், முனைவர் சாந்தி பப்பு, முனைவர் குமார் அகிலேஷ், முனைவர் பிச்சப்பன் உள்ளிட்ட அறிஞர்கள் உரையாற்றினர். முனைவர் பிச்சப்பன், ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கு தொடர்ச்சி வழியாக மனிதர்கள் உலகின் பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்தது குறித்தும் இந்தியாவிலுள்ள தொன்மை மிக்க சாதிகள் குறித்தும்; திராவிட இனத்தைச் சார்ந்த மக்களின் பரிணாம வளர்ச்சி குறித்தும் விரிவாகப் பேசினார்.

கீழடி தேசிய கருத்தரங்கில் முனைவர். பிச்சப்பன் பேச்சு

இந்நிகழ்வில் பேசிய தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் த. உதயச்சந்திரன், "மதுரையில் இதுபோன்ற தேசிய கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கனவு. அது தற்போது நிறைவேறியிருக்கிறது. நான்மாடக்கூடல் என்றழைக்கப்படும் மதுரை, சங்க காலத்தில் புலவர்களும் அறிஞர்களும் ஒருங்கிணைந்து தர்க்கம் புரிந்து தமிழ் வளர்த்த நகரம். கீழடி குறித்த தேசிய அளவிலான இக்கருத்தரங்கம் ஒரு தொடக்கம்தான்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இக்கருத்தரங்கின் வாயிலாக மேலும் பல்வேறு கருத்தாக்கங்கள் கிடைத்துள்ளன. அவற்றையும் விரிவுபடுத்தி ஆய்வுசெய்ய வேண்டும். பானையோடுகளிலுள்ள குறியீடுகளைக் கொண்டே மூன்றுக்கும் மேற்பட்ட வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளலாம் என்பதெல்லாம் மிக ஆச்சரியமான ஒன்று. தொடர்ந்து ஆதிச்சநல்லூர், சிவகலை, கீழடி, கொடுமணல், பையம்பள்ளி ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறோம். தொல்லியல் தொடர்பான பணிகளில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தோடும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தோடும் இணைந்து பணியாற்றவுள்ளோம்" என்று கூறினார்.

மேலும், "கீழடியைப் பொறுத்தவரை உணர்வுப்பூர்வமாக அணுகுவதைவிட, அறிவுப்பூர்வமாக ஆராய்வதே சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் இந்தத் தேசிய கருத்தரங்கிற்குத் திட்டமிட்டுள்ளோம். ஏறு தழுவுதல் என்ற ஜல்லிக்கட்டுக்குப் பிறகு உலக தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்த ஒரு சொல் கீழடி. ஆகவே, அதன் தொன்மையை மறுக்க முடியாத ஆதாரங்களோடு நிறுவ வேண்டும் என்பதுதான் நம் எல்லோரின் விருப்பமும்கூட" என்றார்.


இதையும் படிங்க:

உலகமே மெச்சும் கீழடி நீர் மேலாண்மை - தமிழ்நாடு தொல்லியல் துறை

ABOUT THE AUTHOR

...view details