மதுரை: தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த லூயிஸ் சோபியா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "நான் கனடாவிலுள்ள மாண்ட்ரீல் பல்கலையில் படித்து வந்தேன். இதனிடையே 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பயணித்தேன்.
அதே விமானத்தில், அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பயணித்தார். இருவரும் விமானத்திலிருந்து இறங்கும் நேரத்தில், அவரிடம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு நடந்தது வருத்தமாக இருந்தது என்று தெரிவித்தேன்.
இதனால், தமிழிசை ஆத்திரமடைந்து, என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதுதொடர்பாக என் மீது தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்படி என் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நான் எந்த தவறும் செய்யவில்லை.