தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திராவிட இயக்கத்தின் தனித்துவத்தால் தமிழ்நாடு முன்னேற்றம் - பழனிவேல் தியாகராஜன் - Palanivel Thiagarajan

திராவிட இயக்கத்தின் தனித்துவத்தால் தான் தொடர்ந்து தமிழ்நாடு முன்னேறி வருவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பழனிவேல் தியாகராஜன் உரை
பழனிவேல் தியாகராஜன் உரை

By

Published : Apr 27, 2022, 12:29 PM IST

மதுரை: விளாங்குடி பகுதியில் உள்ள பாத்திமா பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற தேசிய இளைஞர் பாராளுமன்ற விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

இவ்விழாவில் அவர் பேசியதாவது, "பெண்களுக்கான கல்வி, சொத்துரிமை, வேலைவாய்ப்பு எந்த அளவுக்கு அளவுகோலுடன் இருக்கிறதோ, அப்போதுதான் அந்த சமூகம் முன் மாதிரியான சமூகமாக இருக்கும். சமுதாயம் முன்னேறி உள்ளது என்பதை நாம் எந்தளவுக்கு மனிதநேயம் அனுதாபம் காட்டுகிறோமோ, அதை வைத்து தான் முன்னேறிய சமுதாயமாக கருத முடியும்.

பழனிவேல் தியாகராஜன் உரை

காலையில் என் வீட்டில் இறை வழிபாடு நடத்திவிட்டு மாலையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தற்போது கிறிஸ்தவக் கல்லூரி நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பேசுகிறேன். இது தான் மதசார்பற்ற தமிழ்நாடு.

தமிழ்நாட்டிற்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதி கடந்த 25 ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது. பணக்கார மாநிலங்களின் நிதியை எடுத்து ஏழை மாநிலத்திற்கு கொடுத்து வருகிறோம் என்கின்றனர். ஆனால் பணக்கார மாநிலங்கள் பணக்கார மாநிலமாகவே தொடர்கின்றன. ஏழை மாநிலங்கள் ஏழை மாநிலங்களாகவே தொடர்ந்து நீடிக்கும் நிலை தான் தற்போது இருக்கிறது.

உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலத்திற்கு மட்டுமே பணம் கொடுக்கப்படும் நிலை உள்ளது. அவர்கள் கல்வியில் முன்னேறவில்லையென்றால் பணம் மட்டும் கொடுத்து கொண்டே இருந்தால் ஒரு மாநிலம் எப்படி முன்னேற முடியும்?. நிதியமைச்சராக சொல்கிறேன் பணம் என்பது முக்கியமானது அல்ல. கலாச்சாரம், சம உரிமை, திறமையை வளர்த்துக் கொள்ள கல்வி மற்றும் அதற்கான பயிற்சியை வழங்குவது தான் முக்கியமானது.

படித்தால் என்ன..? படிக்காவிட்டால் என்ன..? மக்கள் ஆதரவு இருந்தால் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ இடம் கிடைக்கும். இது தான் ஜனநாயகத்தின் சக்தி. 15ஆவது நிதிக்குழு யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறது. எந்த வேறுபாடும் இல்லாமல், அது மனிதருக்குள்ளோ, மிருகங்களுக்குள்ளோ ஆனாலும் கூட, குறிப்பாக இந்த பட்ஜெட்டில் கூட 20 கோடி ரூபாய் கைவிடப்பட்ட நாய்கள் பூனைகளுக்கு அரசு செலவிடும் என பாகுபாடு இல்லாமல் செய்துள்ளோம். இது தான் முன்னேறிய சமுதாயத்தின் அடையாளம்.

சமுதாயத்தின் கடமை, அரசியல் கடமை, அரசியல்வாதியின் கடமையை நூறாண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக செய்வதால் தான் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. நான் சமூகத்தில் பெரிய மனிதனாக வந்தது வித்தை இல்லை. என் தாத்தா படித்தவர் பணக்காரர். அதனால் எனக்கு அது பெரிய விஷயமில்லை. ஆனால் கருணாநிதி கல்லூரியிலோ பள்ளியிலோ படித்தவர் இல்லை. தனது திறமையால் தனித்துவமாக முன்னேறியவர். அதேபோல திராவிட இயக்கத்தின் தனித்துவத்தால் தான் தொடர்ந்து தமிழ்நாடு முன்னேறி வருகிறது" என்றார்.

முன்னதாக கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதையும் படிங்க:எரிசக்தி துறைக்கு 19 புதிய அறிவிப்புகள்

ABOUT THE AUTHOR

...view details