மதுரை பெத்தானியாபுரத்தில் வட்டம் எண் 21க்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில், ஒரு தெருவின் பெயர் ஈழப் போராட்டத்தில் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த அகிம்சைப் போராளி திலிபனின் நினைவாக இன்றும் உள்ளது. அதனை மதுரை மாநகராட்சியின் பெயர்க் குறிப்பேட்டிலும், அத்தெருவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
வடிவம் பெற்ற திலிபனின் உண்ணாநிலை போராட்டம்
இந்திய - இலங்கை அரசுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ராணுவத்தினர் மனித உரிமை அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இலங்கை அரசும் சரிவர செயல்படவில்லை எனக்குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார் திலிபன். சரியாக 12 நாட்கள் கழித்து செப்டம்பர் 26ஆம் தேதி மரணமடைந்தார்.
அந்த தருணத்தில் தனி ஈழம் கோரிய போராட்டம் மிகத் தீவிரமாக இருந்தது. திலிபன் மரணம் இலங்கை, தமிழ்நாட்டை மட்டுமன்றி உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்களின் மனசாட்சியை உலுக்குவதாக அமைந்தது. அதன் பிறகு இந்திய அமைதிப்படையை எதிர்த்து, ஈழப் போராளிகள் தங்களின் போராட்டத்தைத் தொடங்க வேண்டிய நிலை உருவானது.
உண்ணாவிரதமிருந்து அறவழியில் போராடி உயிர் நீத்த திலிபன் நினைவாக 1987ஆம் ஆண்டு, மதுரை பெத்தானியாபுரத்திலுள்ள ஒரு தெருவுக்கு திலிபன் பெயர் சூட்டப்பட்டது. அன்றிலிருந்து தற்போது வரை, திலிபனின் நினைவைத் தொடர்ந்து அத்தெரு மக்களும், ஈழ ஆதரவாளர்களும் அனுசரித்து வருகின்றனர். நேற்று மாலை நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.