மதுரை:கோடை விடுமுறை காலம் தொடங்க உள்ளதையொட்டி, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்குவதாக இன்று (ஏப்.4) அறிவித்துள்ளது. அதில், 'பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - நாகர்கோவில் மற்றும் தென்காசி வழியாக திருநெல்வேலி - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர கோடை விடுமுறை சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (06005) ஏப்.22 முதல் ஜூன் 24 வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
வாராந்திர கோடை விடுமுறை சிறப்பு ரயில்:மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (06006) ஏப்.24 முதல் ஜூன் 26 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 காப்பாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.