மதுரை:இது குறித்து இன்று (டிசம்பர் 3) சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. நிலுவைக் காலியிடங்கள் பற்றி எழுப்பிய கேள்விக்கு (எண் 65) கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.
ஆனால் அந்தப் பதிலில் விடை இல்லை என்பதே உண்மை. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. நிலுவைக் காலியிடங்கள், இட ஒதுக்கீடு அல்லாத காலியிடங்கள் எவ்வளவு என்று கேட்டதற்கு தனித்தனியாக எண்ணிக்கையைத் தராமல் மொத்தமாக 13 ஆயிரத்து 701 காலியிடங்கள் எனப் பதில் தரப்பட்டுள்ளது.
செயல் வடிவப் பணி நியமனங்கள்
கேள்வியே மொத்த காலியிடங்கள் என்று ஒரு வரியில் கேட்கப்பட்டிருந்தால் வேறு விசயம். ஆனால் பிரிவு வாரியாகக் கேள்வி இருக்கும்போது மொத்த எண்ணிக்கையை பதிலாகத் தருவதன் நோக்கம் என்ன? இருந்தாலும் இவ்வளவு காலியிடங்கள் இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. நிலுவைக் காலியிடங்களும் ஆயிரக்கணக்கில் உள்ளன என்பதில் ஐயமில்லை. இட ஒதுக்கீட்டுப் பட்டியல்களைத் (ரோஸ்டர்) தயாரிப்பதில் எந்த மத்திய கல்வி நிறுவனமாவது சிரமங்கள் இருப்பதாக அரசின் வழிகாட்டுதல்களை கோரியுள்ளதா? என்ற கேள்விக்கு இல்லை என அமைச்சர் பதில் அளித்துள்ளார்.