தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரக வேலைத் திட்ட நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி.,

நிதியின்றித் தவிக்கும் ஊரக வேலைத் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு அந்தந்த மாநிலங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சு வெங்கடேசன் எம்பி
சு வெங்கடேசன் எம்பி

By

Published : Nov 2, 2021, 10:53 PM IST

மதுரை:மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தில் பல்வேறு மாநிலங்களுக்கான தொகை நிலுவையில் வைக்கப்பட்டிருப்பது குறித்து ஒன்றிய அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

ஒன்றிய அரசு அனுப்பிய நிதி தீர்ந்து விட்டது

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, 'மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் நாடு முழுக்க நிதியின்றித் தவிக்கிறது. 21 மாநிலங்களில் ஒன்றிய அரசு அனுப்பிய நிதி தீர்ந்து விட்டது.

15 கோடி மக்களின் பசி தீர்க்கும் திட்டம் இது. கோவிட் காலத்தில் வாழ வழியின்றி சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பிய மாநகர உழைப்பாளிகள் இன்னும் திரும்பி வரவில்லை. இதனால், ஊரக வேலைத் திட்டத்தையே அவர்கள் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.

இடதுசாரிக் கட்சிகள் சுட்டிக் காட்டியும் அரசு செவி சாய்க்கவில்லை

ஏற்கெனவே இத்திட்டத்திற்கு ஒதுக்குகிற பட்ஜெட் தொகை போதுமான அளவில் இல்லை. கடந்த ஆண்டு 1.11 லட்சம் கோடி ரூபாய் செலவான நிலையில், இவ்வாண்டு பட்ஜெட்டில் ரூ.73,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அப்போதே இடதுசாரிக் கட்சிகள் சுட்டிக் காட்டியும் அரசு செவி சாய்க்கவில்லை.

அதன் விளைவே தற்போதைய நிதி நெருக்கடி. நாடு முழுக்க கண்டனக் குரல்கள் எழுந்த பின்புலத்தில் கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற செய்திகள் வந்துள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (நவ.01) கடிதம் எழுதி இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தந்த ரூ.3,524.69 கோடி செப்டம்பர் 15, 2021 அன்றே தீர்ந்து விட்டது. அதற்குப் பிறகு நவம்பர் 1 வரை மேற்கொண்டப் பணிகளுக்கான செலவினம் ரூ.1178.42 கோடி.

முதலமைச்சர் கூறி இருப்பது முற்றிலும் சரி

அதற்கான நிதி உடனே தேவைப்படுகிறது. இதே நிலை நீடித்தால் வந்ததை விட இன்னும் அதிகமான மக்கள் நகரங்களை நோக்கி நகர்வார்கள் என்று முதலமைச்சர் கூறி இருப்பது முற்றிலும் சரி. அது மிகப் பெரும் சமூகப் பிரச்சினையாக மாறும்.

இன்னும் நிதியாண்டு முடிய ஐந்து மாதங்கள் உள்ளன. இத்திட்டத்திற்கான நிதித் தேவையை மறு கணக்கீடு செய்யுங்கள். ஏற்கெனவே விழுந்துள்ள பள்ளம், இன்னும் எஞ்சி இருக்கிற மாதங்களுக்கான தேவைகளைக் கணக்கிற்கொண்டு கூடுதல் தொகைகளை உடன் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்'

இக்கோரிக்கையை உள்ளடக்கிய கடிதத்தை ஒன்றிய கிராமப் புற மேம்பாடு மற்றும் வளர்ச்சி அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு சு.வெங்கடேசன் எம்.பி., இன்று(நவ.02) எழுதியுள்ளார்.

இதையும் படிங்க:தொழில் அதிபர் கடத்தல் விவகாரம்: 6 காவலர்களை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details