இதுகுறித்து சு. வெங்கடேசன் எம்பி இன்று (பிப். 4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து ரயில்வேயின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பிங்க் புக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 11 புதிய லைன் திட்டங்களுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்போது வெறும் ரூ. 95 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுவும் ரூ. 208 கோடி தேவைப்படுகிற ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டத்துக்கு 75 கோடியும், மதுரை - அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கான புதிய பாதை திட்டத்தில் ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு வெறும் ரூ. 20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு
மற்ற திட்டங்களான திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை; திண்டிவனம் - நகரி; அத்திப்பட்டு - புத்தூர்; ஈரோடு - பழனி ;சென்னை- மகாபலிபுரம் - கடலூர்; கூடுவாஞ்சேரி - திருப்பெரும்புதூர்; மொரப்பூர் - தர்மபுரி; காரைக்கால் - பேரளம்; சின்னசேலம் - கள்ளக்குறிச்சி; தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ஆகிய திட்டங்களுக்கு தேவைப்படுகிற ரூ. 10 ஆயிரம் கோடிக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் தலா வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு இதேபோல புதிய திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியது. நான் அதனை வன்மையாக கண்டித்தேன். அது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவரையும் சந்தித்தேன். ஆனாலும் இந்த ஆண்டும் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
சென்ற ஆண்டு நான் இதை விமர்சித்த போது ரயில்வே நிர்வாகம் தாங்கள் காட்பாடி - விழுப்புரம்; கரூர் - சேலம் - திண்டுக்கல்; கரூர்- ஈரோடு; சென்னை கடற்கரை - எழும்பூர் ஆகிய இரட்டை பாதை திட்டங்கள் மின் மையத்துடன் கூடியதாக இந்த பட்ஜெட்டில் இணைத்துள்ளோம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அந்த நாலு திட்டத்துக்கும் கூட தலா வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கி இருப்பதை அப்போது சுட்டிக் காட்டினேன்.
ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இந்த ஆண்டும் இந்த நான்கு திட்டங்களில் காட்பாடி - விழுப்புரம் திட்டத்துக்கு ரூ. ஆயிரத்து 600 கோடி தேவைப்படும்போது, ஒதுக்கி இருப்பது வெறும் ஆயிரம் ரூபாய்.
கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்