சென்னை:கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மையத்தில் அமைந்துள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையில் முன்களப் பணியாளர்களுடன் மா. சுப்பிரமணியன் சமத்துவப் பொங்கல் விழாவினைக் கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, மருத்துவப் பணியாளர்களுக்குப் புத்தாடைகளை வழங்கினார்.
சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு தனியார் பள்ளி மாணவிகள், தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மூலம் நிதி திரட்டி, ஏழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி பயில உதவியாக கைப்பேசிகளை மா. சுப்பிரிமணியன் முன்னிலையில் வழங்கினர். தொடர்ந்து கிங்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களின் போக்குவரத்துக்காகப் புதிய வாகனத்தை மா. சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், “மத்திய சுகாதார அமைச்சரிடம், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்றுவருகிறது. மேலும் கட்டுமான பணிகளை உடனடியாகத் தொடங்கவும், கோயம்புத்தூரில் எய்ம்ஸ் கல்லூரி அமைக்கவும், தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கவும், நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மனுவினை வழங்கியுள்ளார்.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி நிறுத்தப்படாது. நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையம் 61 இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. பொங்கல் விடுமுறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் இந்த வாரம் நடத்தப்படாது.