மதுரை:எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு சிவகங்கை மருத்துவக் கல்லூரி அல்லது தேனி மருத்துவக் கல்லூரியை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அனைத்து ஆய்வுகளுக்கும் முழுமையான ஆதரவு தரவுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில்,' கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புதிதாக அமையவுள்ள 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும் வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கைத் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை உருவாக்கி, வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதற்கான தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனுவில் கோரியிருந்தார்.
இம்மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய அரசு தற்காலிக கட்டிடங்களில் மாணவர் சேர்க்கைக்குத் தயார் என தெரிவித்து இருந்தது.