பண்டைய கால மக்கள் இறந்தவர்களை புதைத்து வழிபடும் ஈமச்சின்னங்கள் பலவற்றை உருவாக்கியுள்ளனர். அவற்றில் கற்திட்டையும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு பகுதிகளில் இது போன்ற ஈமச்சின்னங்களைக் காண முடியும். நீத்தாரைப் போற்றி வழிபடும் மரபின் தொடக்க கால பண்பாடாகும்.
இதுபோன்ற ஈமச்சின்னங்கள் மதுரை அருகே நரசிங்கம்பட்டி, உலைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் காணப்படுகின்றன. தொல்லியல் ஆய்வாளர்கள் ப.தேவி அறிவு செல்வம், கோ.சசிகலா, வரலாற்று ஆய்வாளர் அறிவு செல்வம் ஆகியோர் இணைந்து அண்மையில் மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டை ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது, "மலை சார்ந்த பகுதிகளில் கற்திட்டைகளிலும், ஆற்றோர பகுதிகளில் முதுமக்கள் தாழிகளிலும் இறந்தோரை புதைத்தனர். அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் மலையின் சுற்றுப்பகுதியில் அமைந்துள்ள கள்ளந்திரி என்ற கிராமத்தில் கற்திட்டை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல் திட்டை, கிழக்கு பார்த்து மூன்று பக்கங்களும் ஒன்றரை அடி உயரமுள்ள செங்குத்தான 6 கற்களை கொண்டும் அதன் மேலே 4 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல் கொண்டு மூடப்பட்டுள்ளது.
இதன் உள்புறம் சிறு கல்லை ஊன்றி உள்ளனர். அருள்மிகு மாலையம்மன் கோயில் என்ற பெயரில் இக்கல் திட்டை தற்போதும் இப்பகுதி மக்களால் வணங்கப்படுகிறது. இதன் அருகிலேயே ஒன்று முதல் இரண்டு அடி உயரம் கொண்ட 20க்கும் மேற்பட்ட தனித்தனியான செங்குத்து கற்களில் இறந்தவர்களின் பிறப்பு, இறப்பு தேதி பொறிக்கப்பட்டு ஊன்றப்பட்டுள்ளது. பண்டைய மரபின் எச்சமாக பல கற்திட்டைகள் நவீன காலத்தில் உருவாக்கப்பட்டிருந்ததை இங்கு காணமுடிகிறது. கொங்கு நாட்டிலிருந்து விசயநகர-நாயக்கர் காலத்தில் பாண்டி மண்டலத்துக்கு குடிபெயர்ந்த ஒரு குறிப்பிட்ட இன மக்கள் அங்கு பின்பற்றிய இறப்புச் சடங்கை இங்கும் பின்பற்றியுள்ளனர்" என்று கூறினர்.