மதுரை: தூத்துக்குடி மாவட்டம், புதியம்புதூரையைச் சேர்ந்த கதிரேசன், செந்தில்குமார் உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்காக தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்த அனுமதியானது ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், புதியம்புதூரைச் சேர்ந்த சிலர் கரோனா மூன்றாவது அலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக, தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட ஜூலை 27ஆம் தேதி ஆலை முன்பாக கூடியுள்ளனர்.
ஆலை முன்பு கூடியவர்கள் மீது புதியம்புதூரையைச் சேர்ந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரணை செய்ய இடைக்கால தடை விதிக்கவும், இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, புதியம்புதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.