மதுரை:அழகர் மலை.. அழகர் கோயில்.. சரி..! அது என்ன? அழகர் பாதம்..? அதுவும் பாதத்தில் வழிபாடா? இதுபோன்ற கேள்விகளுக்கான இந்தக் கட்டுரையில் தெளிவாகக் காணலாம். மதுரை மாநகரின் கரிமேடு பகுதியின் மதுரா கோட்ஸ் அருகே உள்ளது அழகரடி எனும் பகுதி. இப்பகுதியில்'அழகர் பாதம்' என்ற கோயில் உள்ளது. அந்த கோயிலின் உள்ளே இருக்கும் கருங்கல்லால் ஆன அழகர் பாதத்தை மக்கள் வணங்கிவருகின்றனர். குறிப்பாக அழகரடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் வழிபட்டுச் செல்கின்றனர்.
அழகரின் பொற்பாதம்:ஆடம்பரம் ஏதும் இல்லாமல் பார்ப்பதற்கு சிறிய கோயிலாக உள்ளது. ஆனாலும் கருவறைக்குள் பெருமாளின் திருவுருவம் சுவற்றோடு பதிக்கப்பட்டு பார்ப்பதற்கே கம்பீரமான உள்ளது. இந்த பெருமாளின் கால்களுக்குக் கீழே கருங்கல்லாலான ஓரடிக்கு ஓரடியில் இரண்டு பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குங்குமமும் சந்தனமும் பூசப்பட்டு மலர்கள் அலங்காரத்துடன் பூஜை செய்யப்படுகிறது.
அப்படி நாள்தோறும் காலையும், மாலையும் பூஜைகள் நடைபெற்றுவருகின்றன. அழகரின் அடி, அதாவது அழகரின் பாதம் பட்டதால், இந்த இடம் 'அழகரடி' என்று அழைக்கப்படுவாக மக்கள் கூறுகின்றனர். இதே பெயரில் நான்கு தெருக்களும் கூட இந்த பகுதியில் அமைந்துள்ளன.
ஜல்.. ஜல்.. சலங்கைச் சத்தம்:இந்தஅழகரடி குறித்து கோயிலைப் பராமரித்தும் பூஜைகளும் செய்து வரும் கலாவதி என்ற பெண் கூறுகையில், "பல நூறு ஆண்டுகளாக இந்தப் பாதத்தை மக்கள் வழிபடப்பட்டுவருகின்றனர். ஒரு காலத்தில் தேனூர் வைகையாற்றில் எழுந்தருளிய அழகர், அங்கிருந்து இந்த வழியாகச் செல்லும்போது, இங்கே ஓய்வெடுத்தார் என்று முன்னோர்கள் கூறினர். அதன் அடிப்படையில், அவரது பாதம் பதிந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலை 40 ஆண்டுகளாக பராமரித்து வருகிறோம்.
இந்த கோயிலை சுற்றி மற்றொரு சுவாரசியமான நிகழ்கவுகளும் நடந்துள்ளன. சில இரவு நேரங்களில் இங்கு ஜல்.. ஜல்.. எனும் சலங்கைச் சத்தம் கேட்பதாக எனது குடும்பத்தார் சொல்லி கேட்டுள்ளேன். அதேபோன்று, அவ்வப்போது நாசியைத் துளைக்கும் மலர்களின் நறுமணத்தையும் நாங்கள் நுகர்ந்துள்ளோம். எங்களை பொறுத்தவரை அவையெல்லாம் அழகர் பெருமாளின் நடவடிக்கைகளே என்று கருதுகிறோம்' என்றார். இதைக் கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் அனைவருமே இதையே உண்மை என்கின்றனர்.
அழகர் பாதம் கோயில்:மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் தினத்தன்றே இந்தக் கோயிலிலும் திருவிழா நடைபெறுகிறது. சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன. அழகரைத் தரிசித்துவிட்டு வரும் பக்தர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்த 'அழகர் பாதம்' கோயிலுக்கு வருகை தந்து வணங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது பக்தர்களுக்கு அன்னதானமும் நீர்-மோரும் வழங்கப்படுகிறது.
வேண்டுதல் நிறைவேறும்:இந்த கோயிலின் சிறப்பு குறித்து அதே பகுதியில் வசிக்கும் ஷகீலாதேவி கூறுகையில், "ஆனையூர், அனுப்பானடி உள்ளிட்ட மதுரையின் பல்வேறு கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வேண்டுதல் வைத்தால் நிறைவேறுவதாக கூறக்கேட்டிருக்கிறேன். இதனாலேயே, இங்கு எப்போதும் மக்கள் வழிபாட்டுக்குவருகின்றனர். கரோனா காலகட்டத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்க வாய்ப்பில்லாமல் போனது. ஆனாலும் அந்த விழா நாள்களில் அழகர் பாதம் குறித்துத் அறிந்த மக்கள் இங்கு வந்து வழிபட்டனர்' என்றார்.
திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டபோது தான், சோழவந்தான் அருகேயுள்ள தேனூர் வைகையாற்றங்கரையில் எழுந்தருளிய அழகரை, மதுரைக்கு அழைத்து வந்து மீனாட்சி கோயில் விழாக்களோடு ஒருங்கிணைத்தார். இதற்கு முன்னதாக தேனூருக்கும் அழகரடிக்கும் மிகுந்த தொடர்பிருந்துள்ளது.