மதுரை:(Special train for Pithuru pooja): இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வரும் தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்ய செல்பவர்களுக்கு மதுரையிலிருந்து கயா வரை, ஒரு சுற்றுலா ரயிலை இயக்க இருப்பதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை ரயில்வே கூட்டம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முன்னோர்களுக்கு தை அமாவாசை அன்று பித்ரு பூஜை செய்ய மதுரையிலிருந்து கயா வரை ஒரு சுற்றுலா ரயிலை இயக்க இருக்கிறது.
ரயில் வழித்தடம்
இந்த சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து 2022ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல் வழியாக கயா சென்று சேரும்.
வழியில் கொல்கத்தாவில் உள்ளூர் சுற்றுலா தலங்களான காளி தேவி, காமாக்யா தேவி, காசி விசாலாட்சி, கயாவில் உள்ள மங்கள கௌரி, அலகாபாத்தில் உள்ள அலோபிதேவி பூரியிலுள்ள பிமலாதேவி போன்ற 5 சக்தி பீடங்களையும், திரிவேணி சங்கமம், கொனார்க் சூரியநாதர் கோயில் மற்றும் அருகிலுள்ள ஆலயங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு கயாவில் முன்னோர்களுக்குப் பித்ரு பூஜை செய்து கடைசியாக விஷ்ணு பாதத்தை தரிசிக்க வைத்துவிட்டு, மதுரை திரும்பும்படி 13 நாட்கள் பயணிகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.