மதுரை: மாவட்ட அளவில் செல்போன்களைப் பறிகொடுத்த நபர்களுக்கு, அதனை மீட்டு ஒப்படைக்கும் நிகழ்வு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஜன.27) நடைபெற்றது. பிறகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இதுவரை திருடப்பட்ட 600 செல்பேசிகள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற நிகழ்வில் மட்டும் 75 செல்பேசிகள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ரூ.25 லட்சம் மீட்கப்பட்டது
அதுமட்டுமன்றி இணைய வழி பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை இழந்த நபர்களுக்கு மொத்தமாக ரூ.25 லட்சம் மீட்கப்பட்டு அவரவர் வங்கிக் கணக்குகளில், அளித்துள்ள புகார்களின் அடிப்படையில் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளன. இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறை மிக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு மீட்டுள்ளனர்.
தற்போது செல்பேசிகளைப் பறிகொடுத்த நபர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் மீட்கப்பட்டவுடன் அந்தந்த வாரத்திலேயே திரும்பக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்படாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
புகார் எண்கள் - 155260
அதிகாரப்பூர்வமற்ற முறையில் வரும் ஓடிபி எண்களை உள்ளீடு செய்ய வேண்டாம். இணைய வழி பணப்பரிவர்த்தனைகளின்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இதுபோன்ற இணை வழி மோசடிகளில் பாதிக்கப்பட்டால் 155260 என்ற எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணைய தளத்திலும் புகார் அளித்தால் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இதனால், உடனடியாகத் தீர்வும் கிடைக்கும்.