இயற்கையை நேசிக்க கற்போம்
குழந்தைகளுக்குப் பள்ளிக்கல்வி எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் வகுப்பறையைத் தாண்டிய கற்றலும். சூழல் மாசுபாடு அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், மரங்களின் அவசியத்தை இன்றைய தலைமுறை உணரத் தலைப்பட்டுவிட்டது. அரையாண்டு விடுமுறையில் என்ன கற்கலாம் என்றால், இயற்கையை நேசிக்கக் கற்கலாம். அதனைப் பேணிக் காக்கவும் கற்கலாம் என்பதுதான் அசோக்குமாரின் பதிலாக இருக்கிறது.
மதுரையில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் வசிக்கும் இவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள குழந்தைகளை அழைத்து, விதைப்பந்து தயாரிப்பது குறித்தும், அதனை எவ்வாறு தூவி விதைப்பது என்பது குறித்தும் களத்திற்கே அழைத்துச்சென்று விளக்குகிறார்.
விதைப்பந்துகள் வீணாகாது!
செம்மண்ணில் தேவையான அளவு சாணமும் நீரும் கலந்து நன்றாகப் பிசையும் இவர்கள் பின்னர் அதன் நடுவே, சேகரித்த விதைகளைப் பொதித்து, உருண்டையாக உருட்டிக் கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து அவற்றை வெயிலில் காயவைத்த பிறகே தூவுவதற்கு எடுத்துச்செல்கின்றனர்.
சாதாரணமாக வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரினங்களால் உணவாக்கப்படவோ அல்லது வெப்பத்தால் முளைக்கும் தன்மையை இழக்கவோ நேரிடலாம். அதேநேரத்தில் நிலமானது செடி வளர்வதற்கான தன்மை இல்லாமல் கடினமானதாக இருந்தாலும் விதைகள் முளைக்காது.
ஆனால் விதைப்பந்துகளை தரிசு நிலங்கள், காடுகள், மலைகள் இப்படி எல்லா இடங்களிலும் தூவலாம். ஓராண்டுவரை விதை பத்திரமாக முளைக்க ஏற்றதாக இருக்கும்.