மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியிலுள்ள ஆவின் பாலகத்தின் இளநிலை ஆய்வாளரான சுசிலா என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
அந்த மனுவில், "நான் 2015ஆம் ஆண்டு ஆவின் பாலகத்தில் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தேன். அப்போது எனக்கு உயர் அலுவலராக இருந்த கிறிஸ்துதாஸ் துணைப் பதிவாளராகப் பணியாற்றினார்.
அவர் எனக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாலியல் தொல்லைகள் கொடுத்துவந்தார். அவரது ஆசைக்கு நான் இணங்க மறுத்ததால், எனக்கும், எனது வேலைக்கும் தொடர்ந்து இடையூறு செய்துவந்தார்.
பாலியல் ரீதியாக அவருக்கு ஒத்துழைப்பு தராததால், ஒரே வருடத்தில் நான்கு முறை எனக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை (Memo) வழங்கப்பட்டது. இதன் காரணமாக, எனக்கு கிடைக்கவிருந்த பதவி உயர்வில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
என் மீது வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணைகளைத் தடை செய்யக்கோரி ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாலியல் தொந்தரவு கொடுத்த கிறிஸ்துதாஸ் மீது விசாகா ஆணையம் மூலம் விசாரணை நடத்த வேண்டும். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
தற்போது கூடுதல் ஆணையராகப் பணியாற்றிவரும் கிறிஸ்துதாஸ் விருப்ப ஓய்வுபெற்று, பணியிலிருந்து செல்வதற்கு முயற்சிசெய்கிறார். இதனைத் தடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ண ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்தப் புகார் குறித்து, சென்னை பால்வளத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க :பெண்களை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய பாஜக பிரமுகர்!