மதுரை நகர்ப்பகுதிக்குள் உள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளுள் ஒன்று வைகையின் வடபுறம் அமைந்துள்ள செல்லூர் கண்மாய். ஆனையூர், சிலையனேரி, தத்தனேரி, எஸ்.ஆலங்குளம் ஆகிய கண்மாய்களின் போக்குக் கால்வாய்கள் மூலமும், மழைநீர் வாயிலாகவும் செல்லூர் கண்மாய் நீரைப் பெறுகிறது.
இக்கண்மாயின் மிகுதியான நீர் செல்லூர் வாய்க்கால் மூலமாக வழிந்தோடி, ஆழ்வார்புரம் அருகே வைகையில் கலக்கிறது. இதன் மொத்த தண்ணீர் பரப்பளவு 38.35 ஹெக்டேராகும். அதேபோல் 16.50 மில்லியன் கன அடி நீரைத் தாங்கும் கொள்ளளவைக் கொண்டது. இந்தக் கண்மாயின் மூலமாக 78.73 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெற்றிருந்தன. ஆனால், தற்போது அவையனைத்தும் குடியிருப்புகளாகிவிட்டன. தற்போதைய நிலையில் செல்லூர் கண்மாய் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கான நீர்நிலையாக மட்டுமே திகழ்கிறது.
ஆகையால் இக்கண்மாயின் நீர் இருப்பைப் பொறுத்து, இதன் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு நிலத்தடி நீர் கிடைக்கும். பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு, தற்போது இந்தக் கண்மாயில் தமிழ்நாடு அரசு ரூ.48 லட்சத்திற்குக் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கரையைப் பலப்படுத்தல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள கால்வாய்களின் கரைகளை உயர்த்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.