மதுரை:மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் அருகேயுள்ள தமிழன்னை சிலைக்கும், தியாகிகளின் படங்களுக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர் சிலை உடைத்தது கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். திமுக ஆட்சியில் மக்களுக்கும், காவல் துறையினருக்கும் மட்டுமல்ல, சிலைக்கும் கூட பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது.
திமுக அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, அரசு அலுவலர்களுக்கும் அல்வா கொடுத்துள்ளது. அதற்கான பதிலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளிப்பார்கள்.